Friday, March 18, 2016

ஷைலஜா என்று ஒரு தோழி...!

கடலால் பிரித்து மனதால் நெருங்கி இருக்கும் சில தோழமைகளும் உறவுகளும் கிடைத்தது தான் இந்த இணைய வெளியில் இத்தனை காலம் சுற்றி வந்ததில் எனக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல விசயம்...
அப்படிக் கிடைத்த  பொக்கிஷமான உறவுகளில்  அறிமுகமான முதல் பின்னூட்டத்திலிருந்து இன்று வரை  அதே துள்ளல்..அதே ஜோவியல் அதே இனிமை அதே அன்பு அதே நட்போடு  இருக்கும் ஒரு ஆத்மா என் மனதுக்கு மிகப் பிடித்த ஷைலஜா!
இணையத்தில்  மனதுக்கு மிக நெருங்கியவர்களுடன் ஏதோ ஒரு புள்ளியில் முரண்பட்டு, விவாதித்து , கோபித்து , வாதாடி , முகத்தை தூக்கி வைச்சு, மனம் நொந்து ...சிலரால் மறக்கப்பட்டு , சிலரால் கவனிக்கப்படாமல் , பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு வலம் வருவது  சகஜம் எல்லோருக்கும் .. 

ஆனால் இந்த வினாடி வரை அப்படி ஒரு  கீறல் எதுவுமில்லாமல் எல்லோருடனும் ஜோவியலாக குறும்பாக நல்ல ஒரு தோழியாக  எல்லாராலும் விரும்பப்படும் ஒரு ஆத்மாவாக சைலஜாவை தான் பார்த்து வருகிறேன்....அந்த வகையில் ஷைலஜா மேல் ஒருவித ஈர்ப்பு, மலைப்பு கூடவே சின்ன பொறாமையும் எனக்கு இருக்கிறது.
அவருடைய மைபா வின் ஏகோபித்த ராயல்டி உரிமை எனக்கே எனக்கு என்று உரிமையுடன் நான் கொண்டாடும் அளவுக்கு  அந்த மைபா என்ற வார்த்தையை வைத்து எத்தனை மொக்கைகள் இதுவரை போட்டேன் என்று எனக்கே தெரியாது....ஆனால் சைலஜா என்ற பெயர் வந்தால் கூடவே ஒரு தடவையாவது  அந்த மைபா (மைசூர் பாகு)  என்ற வார்த்தை இல்லாமல் ஒரு உரையாடலையாவது நானும் ஷைலஜாவும் நடத்தியிருப்போமா என்றால் இல்லை என்று ஆணித்த்ரமாக சொல்லலாம்....
இணையத்தில் முத்தமிழ் குழுமத்தின் மூலம் நட்பாகி, முக்குழும சந்திப்பு திருவிழாவுக்கான ஏற்பாடுகளில் உதவி , ஆலோசனைகள் தந்து, தொடர்ந்து பொங்கல் தினம் , மகளிர் தினம், சுதந்திர தினம் போன்ற விஷேஷ நாட்களில் சிஃபி , விகடன்.காம் போன்ற வெளிகளில் என்னை என் எழுத்து மூலம் நுழைத்து.....இப்படி பல விசயங்களில் நெருங்கி சட்டென்று மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார்..
ஒரு பிரபலமான எழுத்தாளரின் மகள் என்றோ , 200 சிறுகதைகளுக்கும் மேல் எழுதிய் எழுத்தாளர் ஷைலஜா என்றோ எனக்கு அப்போது தெரியாது....அப்படி ஒரு அடையாளத்துடன் என்னை அவர் இதுவரை நெருங்கியதும் இல்லை... அப்படியொரு பிரபலமானவரா என்று நான் மலைத்து போன போதும் கூட அட சும்மா இருங்க சுவாதி என்று அசால்டாக தோளில் கை போட்ட ஒரு தோழி...!
கவிதைக்கு கவிதையாக போட்டிக் கவிதை எழுதி நாங்கள் இருந்த கவிதை இழைகளும், மொக்கை இழைகளும்....இப்பவும் முத்தமிழ், பண்புடன் ,பிரவாகம் குழுமங்களில் இருக்கிறது....எங்களுடைய சில இழைகள்  அந்த நாட்களில் அதிகப்படியான பின்னூட்டங்களால் நிரம்பியவை என்ற பெருமையும் இருக்கிறது... இப்போதெல்லாம் , சாதி , மதம், இனம் போன்ற விசயங்களில் நடக்கும் சண்டைகள் தான் இழைகளாக வளர்ந்து கிடக்கின்றன... ஆனால் நாங்கள் இவை எதுவுமில்லாமலே மிகச் சிறந்த ஜனரஞ்சகமான இழைகளில் புகுந்து விளையாடியிருக்கிறோம் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறோம்..
இப்படி ஒரு தோழியை எப்போதாவது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பல தடவை கவலைப்பட்டதுண்டு...
அந்த நாளும் வந்தது.. 
ஒரு வசந்த காலத்தின் ஒரு நாள்  ஷைலஜா எங்கள் வீட்டுக்கு வந்தார். கூடவே   சங்கர் அண்ணா, அண்ணி , சிவ சிவ ஐயா என்று எங்களுக்கு பிரியமானவர்களியும் கூட்டி வந்தார். அந்த மாலைப் பொழுதில் இவர்கள் எல்லாருடனும், ஸ்கைப் வழியாக சுதனி விஜியுமாக கழிந்த அந்த  மணித்துளிகள் மிக மிக அற்புதமானவை...வீட்டில் எல்லார் மனதிலும் குடி புகுந்த தேவதை!
பாட்டும், கும்மாளமுமாய் என்னவொரு இனிமையான நாள் அது? அதன் பின் அட்லாண்டி சிட்டி கஸினோவில் ஒரு  நாள் பொழுது...பின் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டில் தங்கி அடுத்த நாள் எங்கள் வீட்டில் கோலம் போட்டு, கடைத்தெருவெல்லாம் சுற்றி...  ம்ம்ம்ம்ம்  பிரிவுகளின் திகதி நிச்சயிக்கப்பட்ட சந்திப்பு அது...!
என் தோழி ஷைலஜா.... !
:)
அந்த நட்பின் பொக்கிஷத்துக்கு இன்று பிறந்தநாள்...!
எங்கள் தோழி இலக்கியத்தின் பன் முகங்களில் இன்னும் பல வெற்றிகள் கண்டு. வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Thursday, January 29, 2015

என்றும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்குமுரிய அண்ணாவுக்கு  நம் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 


வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சகல இடரும் தடையும் கடந்து பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.    


அன்புடன்
மச்சான், தங்கை
மருமக்கள் 


Tuesday, September 9, 2014




Soul mate..! ஒருவரின் ஆத்மாவின் சரி பாதி இன்னொருவரிடம் தான் இருக்கிறதாம். அந்த இரு பாதிகளும் வாழ்வில் சந்தித்து இணையும் போது மனமொத்த காதலர்களாக..தம்பதியர்களாக வாழ்வில் இணைவார்களாம். அந்த சரிபாதி ஆன்மாவை உணரும் வரை தேடல்கள் தொடரும். என்னுடைய அமெரிக்க சிநேகிதி ஒருவர் சொன்ன விளக்கம் இது.

வாழ்வில் மனமொத்த தம்பதிகளாக இருப்பது என்பது ஒருசிலருக்கு தான் வரமாக வாய்த்திருக்கிறது. அப்படியொரு தம்பதியை என் வாழ்வில் காண்பித்த எல்லாம் வல்ல சக்திக்கு நன்றிகள்..! அவர்கள் சகோதரர் துரையும் சாந்தி துரையும்!!

இணையம் பலரை அறிமுகப்படுத்துகிறது. எல்லோரும் ரயில்பயணங்களில் சந்தித்தவர்களாக நகர்ந்து கொண்டிருக்கும் போது சில குறிப்பிட்டவர்களுடன் எங்கள் மனம் முகம் பார்க்காமலேயே ஏதோ ஒரு உறவைச் சொல்லி இணைந்துவிடுகிறது. அப்படி மனம் ஒன்றியவர்களில் ஒருவர் தான் வள்ளுவனின் குறளுக்கு இரண்டாவது வடிவம் கொடுத்த எங்கள் குழும வள்ளுவர் சகோதரர் துரை!! இலக்கியக் கடலில் குதித்து முக்குளித்த தூத்துக்குடி முத்து !

இன்று எங்கள் காலத்தின் வள்ளுவர் துரை அவர்களுக்கும் அவருடைய வாசுகி சாந்தி துரை அவர்களுக்கும் திருமணநாள். இன்று போல் என்றும் எங்கும் வாழும் இனிய தமிழின் இலக்கணமாயும் இலக்கியமாயும் இணைந்து எல்லா நலனும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ இருவரையும் வாழ்த்துகிறோம்.

எங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இருவருக்கும்!!


அன்று சொன்னது தான் இன்றும். இன்று சொல்வது தான் என்றும்....எம் இதயம் தொட்டவர்களுக்கு என்றும் எங்கள் இதயம் இயங்கும் வரை வாழ்த்துகளாகவே.....!!

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்.
Durai Nu உடன்

Friday, November 1, 2013

என்றும்  எங்கள்  அன்புக்கும் பாசத்துக்கும், மதிப்புகுரிய  ஐயாவுக்கும் அம்மாவுக்கும் எங்கள் மனமார்ந்த இனிய திருமணநாள்  நல்வாழ்த்துகள்!

எல்லா நலனும் வளமும், தேக ஆரோக்கியமும் அமைதியுமாய் இன்று போல் என்றும் இணைபிரியாமல் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கி உங்கள் ஆசீர்வாதங்களையும் நாடி நிற்கிறோம்.





அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Tuesday, October 15, 2013

எந்தன் பச்சைக்கிளிக்கொரு வாழ்த்து!


வாழ்கை ஒருவித அலட்சியத்துடனேயே கழிந்து கொண்டிருந்த நாட்கள் அவை....! எனக்கும் சரி என் கணவருக்கும் சரி சிரிப்பும் கும்மாளமும் ,சட்டை சட்டையாய் வாங்கிக் குவித்தலும், இனிமையான பயணங்களும், கசினோக்களில் போட்டி போட்டு ரஷ்யன் ரோலர்களுமாய் எந்தவொரு பயமுமில்லாமல் வாழ்கை போய்க் கொண்டிருந்த நாட்களின் திசை மாற்றுக் காரணியாய் வந்த அதிசயம் என் அஷ்வத்தாமா!!



எல்லாரும் ஏன் இந்தப் பெயர் என்றோ, யாருமே வைக்காத பெயர் என்றோ, அமெரிக்காவில் வெள்ளைக்காரன்கள் இந்தப் பெயரை என்னமாதிரியெல்லாம் உச்சரித்து குதறப்போறான்கள் என்றோ தங்கள் அபிப்பிராயங்களைக் கொட்டிக் கொண்டிருந்த வேளை என் தம்பி பாலா ஒரு படி மேலே போய் இருந்து பாருங்கோ...பிள்ளை வளர்ந்து இந்தப் பெயர் வேண்டாமென்று தனக்கு பெயர் மாற்றி வைக்காட்டில் நான் மொட்டை போடுறன் என்றே சவால் விடுமளவுக்கு நான் என் பிள்ளைக்கு “அஷ்வத்தாமா”  என்று தான் பெயர் வைப்பேன் என்று சொன்ன போது தாக்கம் கிளம்பியது. அப்படி ஒரு ஈடுபாடு எனக்கு அந்தப் பெயரில். ஆனால் ஸ்கான் என்ற கட்டத்துக்கு போகும் முன்பே என்ன ஆண்பிள்ளை என்று நீராக கற்பனை செய்கிறீர்?? பெண் பிறந்தால்...? என்ற ஒரு நிகழ்தகவை எல்லாரும் வைத்த போது அது என்னவோ என் மனம் மட்டும் இல்லை ஆண் தான் என்று நம்பியது. என் கணவருக்கு பெண் பிள்ளை தான் விருப்பம். பாவம் அப்பாவின் விருப்பத்தை இரண்டு பிள்ளைகளும் அலட்சியம் செய்துவிட்டார்கள். :):)

எப்படியோ..அஷ்வத்தாமா என் வாழ்கையின் போக்கையே திசை மாற்றிய தேவ தூதன்! கையில் ஒரு பூங்கொத்தாக முதலில் அவரை தூக்கிய அந்த கணத்தின் பாதிப்பை இப்போது இதை எழுதும் போது கூட  அனுபவிக்கிறேன். பிரசவம் என்பதில் சுகப்பிரசவம் என்ற சொல்லே பொய்! வாழ்கையின் மிகப்பெரிய  வலியை எனக்கு தெரியப்படுத்தியவர் என் மகன். :) என்னை  உடலளவிலும் , மனதளவிலும் இரு கூறாக்கிய பெருமை அவருக்கு இருக்கிறது.  
 
தான் பிறந்தபோது எனக்களித்த சந்தோசத்தையும் உவகையையும் ஒரு துளியேனும் குறையவிடாமல் இன்றளவும் தக்க வைத்திருக்கும் மாயம் தெரிந்த என் மகனுக்கு இன்று பிறந்தநாள்...!

எத்தனையோ வார்த்தைகளை புதிது புதிதாக தேடுவேன் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து எழுதும் போது...ஆனால் எனக்கென்று இலாவகமாக எழுதக் கிடைத்த வாழ்த்து  என்றும் வாழும் இனிய தமிழ் போல் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே!! அதையே தான் மகனே உங்களுக்கும் இந்த நாளில் நான் சொல்வது,..!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் செல்லம்!



அன்புடன்
அம்மா.






https://www.youtube.com/watch?v=jLgJ42Uy8qs

Friday, April 19, 2013

சுட்டது.............!!


 

Revealed in pictures: How Karunanidhi chose Stalin as his successor

| Filed under: Featured,General,Latest | Posted by: Ashwin Kumar
 
Kalaignar Karunanidhi today settled the issue of succession in DMK for good today, when he announced that his younger son MK Stalin will take over as the party head after him. How did the DMK patriarch choose Stalin over his eldest son Azhagiri and daughter Kanimozhi, when it seemed that each of them were equally capable of leading the party? The Unreal Times correspondent Madasamy brings you the story in pictures:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி:அஸ்வின் குமார் & ஜப்பார் ஐயா!


 

Thursday, February 21, 2013

"என்ன விலை கொடுப்போம் இன்னும்? (சிறுகதை)


ம்ம்ம்... நாளைக்கு சுதந்திர தினம்...!
"இந்த மண்ணின் சுதந்திரத்தின் அர்த்தம் என்ன என்று இந்தக் காலத்தில் எவராவது உணர்ந்திருக்கிறார்களா? இந்த தேசத்தின் விடுதலைக்காக நடந்த போராட்டங்களில் அப்போது எமக்காக எத்தனை உன்னதங்களின் பெறுமதியை ஈடாக கொடுக்கப்பட்டது என்ற உணர்வாவது இவர்களுக்கு உறைக்குமா? சுதந்திரத்தின் அருமை உணார்ந்தவர்களாகவா இவர்கள் நடந்து கொள்கிறார்கள்? எத்தனை தடியடிகள்? எத்தனை இழப்புகள்? எத்தனை மாமனிதர்களின் இழப்புகள் என்று போராடிய போராட்டம் வெறுமனே இந்த ஒரு ஆகஸ்ட் 15ம் தேதி கொடியேற்ற மட்டும் தானா? மிட்டாய் பரிமாறிக் கொள்ளமட்டும் தானா?"
எனக்குள் இருந்து என்னையே கொட்டிக் கொண்டிருக்கும் குழவியின் கொடுக்கு போன்ற இந்தக் கேள்விகள் இன்னமும் என்னை கொட்டிக் கொண்டு தான் இருந்தது...
பள்ளி ஆசிரியராக இருந்த நான் எனது வேலையை 12 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு சுதந்திர தினத்தன்று தான் ராஜினாமா செய்தேன்..!
வருடக் கணக்காக வெறுமனே தேசியக் கொடி ஏற்றுவதும், தாயின் மணிக்கொடி பாரீர் பாடல் பாடுவதும், மிட்டாய் பரிமாறுவதுமே சம்பிரதாயமாகிப் போன சுதந்திர தினம் போல் அல்லாமல் ஒரு தாக்கத்தை எனக்கு கொடுத்திருந்தது 12 வருடத்திற்கு முன் வந்த அந்த சுதந்திர தினம்!
சுதந்திரம் என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் தெரியாத, அர்த்தம் தெரிந்தும் அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் பொறுப்பற்ற சூழலில்என்னை நான் விலக்கி வர முனைந்து தோற்றுப் போன அடையாளமாக நான் எடுத்த முடிவு தான் அந்த ராஜினாமா!
கடந்து போன வாழ்கையின் இனிமையான சம்பவங்களுக்காக மனம் ஏங்குவதும், நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை நினைத்து துணுக்குறுவதுமாய் வாழ்க்கை நூலில் ஆடும் பொம்மை மாதிரி ஞாபகங்களின் இழுத்த இழுப்புக்கெல்லாம் அங்குமிங்குமாய் தள்ளாடுகிறது...
கனத்த தனிமை பழகிவிட்டதால் சுவாரஸ்யமற்றுப் போன வாழ்கை சலிப்புத் தட்டுகிறது. பழைய நினைவுகள் தனிமையான வீட்டில் இருக்கும் என்னை தொடரும் பேயின் நிழலாக துரத்திக் கொண்டிருக்க, வீட்டிலிருக்கப் பிடிக்காமல் கடற்கரையை நோக்கி நடக்கிறேன். வர வர நடக்கக் கூட முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. களைப்பு மிகுதியாகிறது. என்னுடைய முதுமையை எனக்கே நினைவூட்டும் பௌதீக தாக்கங்கள் அவை. தள்ளாடிய கால்களின் வலியில் மேலே நடக்க முடியாமல் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டேன். அலைகள் வேக வேகமாக வந்து தரையில் மோதுவதும், திரும்பிப் போவதுமாய் இருந்தது... கூடவே என் நினைவுகளும்...
பதினைந்து வருடத்துக்கு முன் இப்படித் தான் இந்த அலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது இளந்திரையனையும், அருள் மொழியையும் இதே கடற்கரையில் முதன் முதலாக பார்த்தேன். வேலை கிடைத்து இந்த ஊரை விட்டுப் போன பின் திரும்பவும் இங்கே வர வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. ஊருக்கு ஊர் வேலை மாற்றலாகி எத்தனையோ வெளியூர் போகக் கிடைத்தாலும் சொந்த ஊருக்குக் கிடைக்கவில்லையே என்று நான் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. ஊரில் உறவென்று இருந்த அப்பாவின் மரணத்தின் பின் எனக்கென்று யாருமே இல்லாத வெறுமை எந்த ஊராய் இருந்தால் என்னவென்ற மனநிலைக்கு தள்ளிவிட்டிருந்தது. ஆனால், இத்தனை காலத்தின் பின் சொந்த ஊருக்கே வேலை மாற்றல் கிடைத்து வந்து, அப்பாவுடன் வாழ்ந்த அதே பழைய வீட்டில் திரும்ப காலடி எடுத்து வைத்த போது கொஞ்சம் சிலிர்ப்பாகத் தான் இருந்தது.
சிறுவயதில் கடற்கரைக்கு அண்மையாக வீடு இருப்பதில் எனக்கு பரமசந்தோசம். அந்த நாட்களிலிருந்தே கடலையும் அலையையும் பார்த்துக் கொண்டிருப்பதில் அலாதிப் பிரியம். நேரம் போவதே தெரியாமல் காலடியில் அலைகள் வந்து அடித்து விட்டுப் போகும் அழகையும், அதன் மாத்திரை மாறாத சந்தத்தையும், கடலின் இரைச்சலையும் அனுபவித்துக் கொண்டே கடற்கரை மணலில் அண்ணாந்தபடி படுத்துக்கிடப்பது என்றால் போதும் எனக்கு. அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அலைகளில் துள்ளி விளையாடின பருவங்கள் மாறி, அரசியல் அவதானிப்பு, இசங்கள் பற்றிய பகிர்வு, கொள்கைகள், விமர்சனங்கள் பேசுமளவுக்கு அறிவு வளர்ந்த வரை கடற்கரையோடு நானும் அப்பாவும் நெருக்கமாயிருந்திருக்கிறோம். அதே கடலில் அப்பாவின் அஸ்தியைக் கரைத்தபின் கடற்கரை வருவதை தவிர்த்தேன்... எத்தனை பேர் வந்து உலவினாலும், எத்தனையோ இரைச்சல்களாய் அந்த அலைகள் முழங்கினாலும் அப்பா இல்லாமல் அந்தக் கடற்கரை சூனியமாக தெரிந்தது. அப்படியே ஆசிரியப் பணி கிடைத்து ஊரைவிட்டுக் கிளம்பியபின் வாழ்கையில் கடலும், கடல் சார்ந்த ரசனைகளும் என்னை விட்டு தொலைந்து போயிருந்தன...
கல்யாணம் என்ற நிகழ்வில் குடும்பம் என்ற ஒரு வட்டம் என்னுடைய சுழற்சியை ஆளுமைப்படுத்தியதில் பழைய விருப்பங்கள் தற்காலிக ஓய்விலிருந்தன. அதன் பின் வாழ்கையில் மனைவியின் மரணம், மகளின் திருமணம், மகனுக்கு வெளியூரில் கிடைத்த வேலை பயணம் என்று என்னுடைய விழுதுகளின் இடம் பெயர்வில் நான் மொட்டையாகிப் போன வேளையில் தான் திரும்பவும் அதே பழைய வாழ்கையை விதி தந்திருந்தது. முன்பு போல் கடற்கரையின் அலைகளை அப்பாவோடு இருந்து ரசித்தது போல் இம்முறை ரசிக்க எனக்கு யாருமில்லாத வேளையில் தான் இளந்திரையன் எனக்கு அறிமுகமானான். அப்போது அவனுக்கு ஒரு பதினாலு வயதிருக்கும். அடிக்கடி அவன் தனது தங்கையுடன் அங்கே வருவான். தங்கை கடல் அலைகளோடு போட்டி போட்டு மணல் வீடு கட்ட முயற்சிப்பாள். அநேகமாக வீடு கட்டி முற்றுப் பெறும் நேரத்தில் அலை வந்து அந்த மணல் வீட்டை கரைத்துச் செல்லும். அவளும் சலிக்காமல் இன்னொரு வீடு கட்டத் தொடங்குவாள்... பெரும்பாலும் அவளுடைய பொழுது இப்படித் தான் போகும். ஆனால் இவன் மட்டும் எப்போதும் கடலுக்குமப்பால் எதையோ தேடுவது போல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி ஒரு பொழுதில் தான் நான் அவனுடன் சிநேகமானேன். தன்னோடு சேர்ந்து இன்னொருவரும் இந்தக் கடலை வெறித்துப் பார்க்க வந்ததில் அவனுக்கும் சந்தோசமோ என்னமோ... சட்டென்று என்னோடு நெருங்கிவிட்டிருந்தான் மனதளவில்.
"மண்டபம் முகாமில ஏதிலிகளா வந்திருக்கிறம் சேர்" என்றான் தன்னைப் பற்றி முதல் அறிமுகம் சொன்ன போது..!
அவனுடைய வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு இனிமையாக இருந்தது.
"உனக்கு என்ன பெயர்?"
"இளந்திரையன். தங்கச்சிக்கு அருள்மொழி."
அவனை விட அவனுடைய பெயர் மனதில் சட்டென்று ஓர் ஈர்ப்பைக் கொடுத்தது.
'உங்கட பெயர் என்ன சேர்?"
"இராமநாதன்"
"நீங்கள் பள்ளிக்கூட மாஸ்டரா?" எதை வைத்து என்னை சரியாகக் கணித்தான் என்று தெரியவில்லை. ஒரு சிலரின் முகத்தைப் பார்த்தால் அவர்களின் தொழில் என்னவென்று ஊகிகலாமோ என்னமோ?
அவனோடு கிடைத்த அந்த அறிமுகம் எனக்கு வலியும், வேதனையும் நிரம்பிய இன்னொரு உலகத்தை அடையாளம் காட்ட அடிக்கல்லாகியது. அதுவரை பத்திரிகைச் செய்திகளாக படித்துக் கொண்டிருந்த ஈழத்து அகதிகளை நான் நேரிலே பார்த்தேன். சோகம் கப்பிய முகங்கள். போரில் உமிழப்பட்ட எச்சங்களாக வலிகளும், வேதனைகளும், கணக்கெடுக்கவியலாத, சொல்லிலடங்கா இழப்புகளுமாய் அங்கிருந்தவர்கள் உருவத்தில் மட்டுமே மனிதர்களாக திரிந்தார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை இருந்தது. இழப்புகளும் வலிகளும் பழகிப் போனவர்கள்.
இளந்திரையனோடு முகாமுக்கு போன பின் தான் உலகத்தின் இன்னொரு முகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. முற்றிலும் வேறுபட்ட அந்த உலகத்தின் அறிமுகம் மிகவும் கொடூரமானதாக மனதை பிசைந்தது. அந்த மனிதர்களின் தமிழும்,வாழ்வும், சோகங்களும், இழப்புகளும், எதிர்பார்ப்புகளும், ஏன் எத்தனையோ இழந்தும் கூட எல்லாவற்றையும் மிஞ்சிய நம்பிக்கையும் கூட எனக்கு பரிச்சயமற்றாவையாகவே இருந்தன. என்னதான் மாநகர பள்ளிக் கூடங்களில் இலவச கல்வியும், மதிய போசனமும் கிடைத்த போதும் இவர்கள் குழந்தைகளில் நிறையப் பேர் பள்ளிக்குப் போக முடியாத நிலையிலிருந்தனர். அவர்களின் இளந்திரையனும், அவன் தங்கை அருள் மொழியும் அடக்கம். இளந்திரையனுக்கு படிக்க வேண்டுமென்று நிறைய ஆசை இருப்பது தெரிந்த போது மாலை நேரங்களில் அவனுக்கும் அருள் மொழிக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க என்னுடைய தனிமையை உபயோகப்படுத்தினேன். இவர்கள் இரண்டுபேருடன் ஆரம்பித்த எனது படிப்பித்தல் சில நாட்களில் அங்கிருந்த அகதிக் குழந்தைகள் பலருக்கும் போய்ச் சேர எல்லோரும் என்னோடு மாஸ்டர் மாஸ்டர் என்று ஒண்டிக் கொண்டார்கள். இவர்களுடன் காலம் கழிந்ததில் எனக்கு என்னுடைய தனிமை மறந்து போய்விட்டது. உன்னதமான சேவை செய்யும் ஆத்ம திருப்தி கிடைத்ததும் அதற்கு காரணமானவனாய் இளந்திரையன் இருந்ததாலும் அவனிடம் எனக்கு ஒரு விசேஷமான அன்பு கூடியது.
அங்கு வரும் போலீஸ்காரர்கள் "என்ன சார்.. இதுங்களுக்கு படிப்புச் சொல்லி கொடுத்து ஏன் உங்க நேரத்தை வீணடிக்கறீங்க? இதுங்களுக்கு படிப்பு தான் ஒரு கேடா? ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் யாராவது அரசியல்வாதியை கொல்ல மனிச வெடிகுண்டா போகப் போகுதுங்க... இல்லைன்னா கள்ளத் தோணி ஏறி அங்க போய் புலிகளோட சேரப் போகுதுங்க... உங்க நேரத்தை வீணடிக்காம போங்க சார்" என்று என்னைக் கேலி செய்வார்கள். முகாமுக்கு ஏதோ காரணங்களை சொல்லிக் கொண்டு போலீஸ் வருவதும் போவதும் அங்கு ஒரு விரும்பத்தகாத ஆனால் சகிக்கப் பழகிவிட்ட நிகழ்வாகிவிட்டிருந்தது. காமாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சள்ன்னு சொல்வாங்க... அது மாதிரி தான் காவல்துறையினர் கண்களில் ஒவ்வொரு ஈழத் தமிழனும் புலிகளாக தெரிகிறார்கள்.
அந்த மக்களின் போராட்டம் மீதான நம்பிக்கை என்னை பல முறை யோசிக்க வைத்திருக்கிறது. சிறு வயதாக இருந்த போது அப்பாவின் அண்ணா ஒருவர் நேதாஜியின் ராணுவத்தில் சேர்ந்து போரில் இறந்து போனது எனக்கும் தெரியும். மகாத்மாவின் தீவிர பக்தரான எனது தாத்தாவால் பெரியப்பாவின் போராட்ட வழியை ஆதரிக்க முடியவில்லை. பெரியப்பா இறந்து போனபின் தாத்தா எங்களுடன் தான் இருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது எனக்கு 12 வயது. அதனால் அப்போதைய போராட்ட நிகழ்வுகள் எனக்கும் தெரியும். தவிர சுதந்திர போராட்டம் பற்றி தாத்தா கதை கதையாக சொல்லக் கேட்டு வளர்ந்தவன் நான். அதனாலேயோஎன்னமோ இந்த மக்களின் சுதந்திர வெறி எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அவர்களின் போராட்ட முறை தான் மனதுக்குள் நெருடியது.
இந்த அகதிகளில் பெருபாலானோர் தமது போராளிகள் தமக்கான தேசத்தை மீட்டெடுப்பார்கள்... பழையபடி தங்கள் தேசத்தில் சுதந்திரமாக வாழலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருப்பது பிரமிப்பாகத் தான் இருந்தது. அதனால் அவர்களுடைய நம்பிக்கைகளை விமர்சனம் செய்வதிலிருந்து நான் விலகி இருந்தேன். பொதுவாகவே அங்கு ஓர் ஆசிரியராக அந்த மக்களிடம் நான் பழகத் தொடங்கியதிலிருந்து எனக்கொரு மனத் திருப்தி. சுதந்திரத்துக்காக என்னுடைய தேசத்தின் தலைவர்களும் மக்களும் எத்தனை கொடுமைகளை அனுபவித்தார்கள், எத்தனையை இழந்தார்கள் என்று எனக்கும் தெரிந்திருந்ததால் இந்த மக்கள் மேல் எனக்கு ஒருவித ஈர்ப்பும் ஒட்டுதலுமாகிப் போனது. காந்தி வழி தான் சரியான வழி என்று சொல்லி சொல்லி வளர்த்தார்கள் எங்கள் வீட்டில். அப்படிப்பட்ட எனக்கு சுதந்திரத்துக்காக ஏங்கித் தவிக்கும் இவர்களுடைய ஆதங்கமும், ஏக்கமும் நன்றாகவே புரிந்தது. அந்தப் புரிதல் தான் இவர்களோடு என்னை ஒன்றிப் போக வைத்தது, சொந்த ஊரில் மிராசுதாரராக இருந்தவரும், தாசில்தாராக இருந்தவரும் கூட இந்த மண்டபத்தில் அகதியாக முடங்கிக் கிடந்ததை நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் தமது கதைகளை என்னுடன் பகிர்வதுண்டு, ஆனால் இளந்திரையனின் குடும்பம் மட்டும் இதுவரை என்னோடு எதைப் பற்றியும் பேசியதில்லை. நானும் கேட்டதில்லை. மற்றவர்களைப் போல போரின் கைங்கரியம் தான் இவர்களும் இங்கு அகதிகளாக இருக்கிறார்கள் என்று எனக்குள் நானே நினைத்துக் கொள்வேன்.
எப்படியோ இவர்களுக்கு ஆசானாக வந்து இரண்டு வருடங்கள் உருண்டோடிப் போனது...
வழமை போல் அன்றைக்கும் முகாமில் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவதற்காக போனேன். முகாமின் உள்ளே வரிசையில் அத்தனை அகதிகளும் நின்றிருந்தனர். மேசை நாற்காலிகள் போடப்பட்டு காவல் துறையினர், ஏட்டைய்யாக்கள் பக்கத்தில் நிற்க தொப்பைகளோடு சரிந்திருந்த படி விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். 'திருடனை ஓடிப் பிடிக்க வேண்டிய போலீஸ்காரர்கள் இத்தனை பெரிய தொப்பையை வைத்துக் கொண்டு எப்படி ஓடுவார்கள்?' என்று அடிக்கடி என் பையன் கேட்பது எனக்கு நினைவுக்கு வந்தது.
"ம்ம்ம்... இன்னிக்கு என்ன காரணத்துக்காக விசாரணையோ?" என்று நினைத்தபடி வரிசையில் நின்ற அந்த மனிதர்களைப் பார்த்தேன். வரிசையில் இளந்திரையன் தனது தாயுடனும், தங்கையுடனும் நின்றிருந்தான். இளந்திரையனின் தாய்க்கு எப்படியும் நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். அழகான பெண் தான். பாவம் இந்த இரண்டு பிள்ளைகளுடன், விதவையாக, ஏதிலியாக இருக்க வேண்டுமென்று இவள் தலையில் எழுதியிருக்கேன்னு நினைக்க வேதனையாகத் தான் இருந்தது. வரிசையில் நின்ற அத்தனை பேரின் முகங்களிலும் பீதி குழைத்து பூசியிருந்தது அப்பட்டமாக தெரிந்தது.
என்ன கேள்வி கேட்க போகிறார்களோ? யாரை பிடித்துக் கொண்டு போகப் போகிறார்களோ? எவ்வளவு கேட்கப் போகிறார்களோ என்ற குழப்பமும் கவலையும் அவர்களிடம் தெரிந்தது. விசாரணை எப்போது முடியும் என்று தெரியவில்லை. இன்றைக்கு வகுப்பு நடத்த முடியும் என்றும் தோன்றவில்லை. இங்கே நின்று பிரயோசனம் இல்லை என்று தோன்றியது. வீட்டுக்கு போய் என்ன செய்யப் போகிறோம் என்ற நினைவில் கடற்கரைக்கு போகலாம் என்ற எண்ணத்துடன் திரும்பி நடக்க தொடங்கினேன். பின்னால் யாரோ ஓடி வருவது போல் ஓர் உணர்வு. திரும்பிப் பார்த்தேன். ஏட்டைய்யா தான் வந்து கொண்டிருந்தார் என்னை நோக்கி...
"சரி தான் என்னையும் விசாரிக்கப் போகிறார்களோ?"
"சார்... இன்ஸ்பெக்டர் சார் உங்களை கூட்டிட்டு வரச் சொல்றார்," என்றார் அந்த ஏட்டைய்யா.
"இன்னிக்கு என்னப்பா விசாரணை?"
"நாளைக்கு சுதந்திர தினம் இல்லியா? சுதந்திர தினம் அன்னிக்கு தமிழ்நாட்டில பல இடங்களில பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருக்குன்னு மேலிடத்தில இருந்து தகவல் வந்திருக்கு. எல்லா இடத்திலயும் அலர்ட்டா இருக்கச் சொல்லி ஆர்டர். நம்ம ஊரில இந்த இடத்தை விட்டா வேற எங்க அலர்ட்டா இருக்கணும் சொல்லுங்க.. அதான்.. இன்னிக்கு இங்க விசாரணை.. வந்திருக்கிறது புது இன்ஸ்பெக்டர். சின்ன வயசு தான். ஆனாலும் ரொம்ப கெட்டிக்காரர் மாதிரி தெரியுது. கண்டிப்பானவராயும் இருக்கார். எதுக்கும் நீங்க கொஞ்சம் பொறுமையாவே பேசுங்க சார். இதுங்க கூட சங்காத்தியம் வைக்காதீங்கன்னு சொன்னா நீங்க எங்க கேட்கறீங்க."
என்னிடம் இருக்கும் அக்கறையில் அந்த ஏட்டைய்யா பேசுவதை புன்னகையுடன் எதிர்கொண்டேன்.
"சுதந்திரமான ஒரு தேசத்தில் வசதி இல்லாத அகதிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது கூட பயங்கரவாதத்துடன் சம்மந்தப்பட்டதா?" எனக்குப் புரியவில்லை.
அவர்கள் இருந்த இடத்துக்குப் போனேன். அந்த இன்ஸ்பெக்டரின் முகத்தைப் பார்க்க பரிச்சயமான முகம் போல் இருந்தது. ஆனால் அந்தச் சூழ்நிலையில் எதையும் சிந்தித்துப் பார்க்க முடியாமல் இருந்தது எனக்கு. இளந்திரையனை விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் அவனுடைய தாயின் பக்கம் பார்வையை மேயவிட்டுக் கொண்டிருந்தார். விசாரிக்கும் தோரணைக்கும் விரசமான பார்வைக்கும் வித்தியாசம் புரிந்த அந்த பெண் உடம்பு கூச குறுகுவதை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. மனதுக்குள் ஆத்திரம் பொங்க மௌனமாக நின்றேன்.
"என்ன வயசு உனக்கு?"
"16 சேர்"
"எத்தனாவது படிக்கிற?"
"படிக்க போறதில்லை சேர்... மாஸ்டரிட்ட தான் பின்னேரங்களில இங்க இருந்து படிக்கிறம்."
"காம்புக்கு வெளில உனக்கு தெரிஞ்சவங்க யார் யார் இருக்காங்க?"
"எங்களுக்கு யாருமில்ல சேர்"
"நீ புலியா?"
அவசராவசரமா இளந்திரையனின் தாய் "இல்லை ஐயா... அவன் ஒண்டிலயும் தொடர்பில்லை ஐயா... அவன் சின்னப் பிள்ளை.." என்று பதில் சொல்ல அவளை இன்னொரு தடவை மேய்ந்தார் பார்வையால்...
"சின்னப் பசங்க தானே உங்க ஊரில புலிக்கு போய்ட்டிருக்காங்க..."
"அவன் இந்த காம்பை விட்டு வெளில எங்கயும் போறதில்லை ஐயா..."
"எங்க உன்னோட வீட்டுக்காரர்?"
"அவர் செத்துப்போய்ட்டார் ஐயா"
"ம்ம்ம்... சரி நீ போ..."
விசாரணைக்கிடையில் என் பக்கம் பார்வையைத் திருப்பிய அந்த இன்ஸ்பெக்டர் மெல்ல புன்னகைத்தார்... "சார்என்ன சார் நீங்க இங்க?"
"நான் ஒரு பள்ளி ஆசிரியர்... இங்க இருக்கற குழந்தைகளுக்கு சாயங்காலத்துல பாடம் சொல்லிக் கொடுப்பேன்."
"எங்க போனாலும் இலவசமா பாடம் சொல்லிக் கொடுக்க உங்களுக்கு பசங்க கிடைக்கறாங்க போல இருக்கு... நானும் ஒரு காலத்துல உங்க கிட்ட படிச்சவன் தானே. சாருக்கு தான் என்னை அடையாளம் தெரியலை." என்றார்.
வியப்புடன் அவருடைய முகத்தை ஆராய்ந்தேன். நினைவில் கொண்டு வரப் பார்த்து தோற்றுப் போனேன்.
"மாயவரத்துல உங்ககிட்ட பள்ளிலயும் படிச்சிருக்கேன் பத்தாவது... உங்க வீட்டுக்கும் வந்து படிச்சிருக்கேனே... மணிமாறன் எம் பேரு.. தொழிற்சங்க தலைவரா இருந்த வேலுமணியோட பையன் சார் நான்.. அங்க உங்க பையனோட கிளாஸ்மேட்.. ஸார் நான்... உங்க பையன் இப்போ எங்க வேலை பார்க்கறார்?"
தன்னை நினைவு படுத்த அவர் கொடுத்த தகவல்கள் மெல்ல மெல்ல எனக்கு அவரை அடையாளம் காட்ட "அட... மாறன்... ரொம்ப சந்தோசமப்பா..." என்றேன்.
"என் பையன் இப்ப சூரத்ல வேலைல இருக்கான்."
"உங்க பொண்ணூ? வீட்டுக்கார அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?"
"பொண்ணு கல்யாணமாகி புனேல இருக்கா. பொண்டாட்டி போய்ட்டா... திடீர்ன்னு நெஞ்சுவலின்னு சொன்னா... ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள... எல்லாம் முடிஞ்சு போச்சு... அஞ்சு வருசமாச்சு.."
"அடடா.." என்று உச்சுக் கொட்டினான் மாறன்.
"இந்த மனுசங்களை எதுக்கு அடிக்கடி உங்காளுங்க இப்படி விசாரணைன்னு வந்து கஷ்டப்படுத்தறாங்க..? ரெண்டு வருசமா நான் இங்க தான் இவங்க பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கறேன்... எனக்குத் தெரிஞ்சு இங்க எந்த அசம்பாவிதமும் நடக்கலைப்பா..."
அகதிகளுக்காக அவனிடம் பரிந்து பேச அவன் என்னுடைய பழைய மாணவன் என்ற உரிமையை நான் எடுத்துக் கொண்டேன்.
தன்னைக் கடந்து போன இளந்திரையனின் தாய் மீது கவனம் செலுத்திக் கொண்டே எனக்கு பதில் அளித்தான்... "அப்படி அசட்டையா இருந்துட முடியாது சார்... இவங்களை அவ்வளவு லேசில நம்ப முடியாது... எந்த நேரம் எந்த வயசுல யார் என்ன பண்ணுவாங்கன்னு கண்டுபிடிக்கிறதே கஸ்டம் சார்... எங்க டியூட்டில பாவம் எல்லாம் பார்க்கலாமா..? அப்புறம் ஏதாவது ஏடாகூடாம ஒண்ணு நடந்துதுன்னு வைச்சுக்கோங்க... மேலிடத்துக்கு யாரால பதில் சொல்ல முடியும்?"
அவனுடைய பதில் நியாயமாக இருந்தாலும் அவன் பார்வை படர்ந்த இடம் அவனுடைய நேர்மையை பறைசாற்றவில்லை. கடமைக்கு பதிலாக கள்ளம் சொல்லும் பார்வை. துப்பு துலக்குவதை பார்க்கிலும் துஷ்டத்தனம் நிறையத் தெரிந்தது. மனிதர்கள் வெகு விரைவில் மாறிவிடுகிறார்கள். ஏதோ ஒரு காரணமோ சூழ்நிலையோ அல்லது பலதோ தலைகீழாக அவர்களை மாற்றிவிடுகின்றன. மணிமாறனிடமும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது போல் ஏனோ என் மனதுக்கு தோன்றியது. நமக்கு பரிச்சயமான மனிதர்கள் வித்தியாசப்படும் போது மனது ஏற்க மறுத்துவிடுகிறது. ஒரு விலகல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அப்படித் தான் அந்த நிமிடமே மாறனை விட்டு என் மனசு விலகிப் போனது.
"சரி சார்.. நேரம் கிடைக்கறப்போ உங்க வீட்டுக்கு வரேன். உங்க பையன் கூட பேசினா நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றான்.
அந்த விடை பெறுதல் அப்போதைக்கு எனக்கும் ஆசுவாசத்தைக் கொடுக்க, 'சரி' என்று தலையாட்டிவிட்டு நகர்ந்தேன்.
அன்று பாடம் நடத்த முடியவில்லை. விசாரணைக்குள் அகதிகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாடம் நடத்துவது என்பது சிரமமான விசயம். பயம், கவலை ,குழப்பம் என்று அவர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு பாடம் படித்தல் முக்கியத்துவமானதாயும் இல்லை. அதனால் கடற்கரையில் போய் உட்கார்ந்து கொண்டேன். கடற்கரைக் காற்று கூட அப்பொது என்னவோ அனலாக வீசுவது போல் இருந்தது. மனதுக்குள் ஏதோ இனம் புரியாத குழப்பமோ பயமோ வந்து உட்கார்ந்தது போல் உணர்வு. என்னவோ அசம்பாவிதம் நடக்கப் போவதை மன உணர்வு முன்னாலேயே எச்சரிப்பது போல் தோன்றியது. அந்த உணர்வை அலட்சியமாக புறம் தள்ளவும் முடியவில்லை. ஏனோ மணிமாறன் இளந்திரையனின் தாயைப் பார்த்த பார்வை அடிக்கடி எனக்கு மனக்கண்ணுக்குள் வந்து போனது.
இப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. "என்ன சேர் இங்க வந்து இருக்கிறியள்?" என்ற இளந்திரையனின் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
"அவுங்க எல்லாம் போய்ட்டாங்களா?"
"இல்ல சேர்... இன்னும் இருக்கினம்.. நாலு பேரை பிடிச்சு வைச்சிருக்கினம்.. ஸ்டேசனுக்கு கொண்டு போகப் போகினம் போல இருக்கு" என்ற அவன் குரலில் இனம் புரியாத சோகம் இழையோடியதை அவதானித்தேன். அவனுக்கு ஆறுதலாக ஏதாவது சொல்ல வேண்டும் போல் தோன்றினாலும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
காவல்துறையையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் சந்தேகப்படுபவர்கள் எல்லோருமே குற்றவாளிகள் இல்லைன்னாலும், குற்றவாளிகள் இல்லாமலும் இல்லை. ஒரு நிமிடம் அலட்சியமாக இருந்தாலும் பாரதூரமாக ஏதும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தால் இழப்புகளுக்கும், வலிகளுக்கும் யார் ஈடு கட்டப் போகிறார்கள்? சமூகமும், அரசும், ஊடகங்களும் காவல்துறையை தானே துளைத்தெடுப்பார்கள்? ஒருவர் தமது கடமையில் கண்டிப்பாக இருப்பதையோ கவனமாக இருப்பதையோ குற்றம் சொல்ல மற்றவர்களுக்குஎன்ன உரிமை இருக்கிறது?
சிறிது நேரம் இளந்திரையன் மௌனமாக அருள்மொழி வீடு கட்டுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். எதையோஎன்னிடம் கேட்க வேண்டுமென்று நினைக்கிறான் என்று புரிந்தது. இப்போதெல்லாம் இளந்திரையன் விரிவாக சிந்திக்கிறான். எல்லா விசயங்களையும் அலசிப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். லைப்ரரி போய் நிறைய படிக்கிறானாம். இந்த ஊர் லைப்ரரியில் புத்தகங்கள் போதாதாம். அவன் குறைபட்டுக் கொண்டான். யாழ்ப்பாணத்தில ஒரு லட்சம் புத்தகங்களோட எரிந்து போன லைப்ரரியைப் பற்றி அவன் கேள்விப்பட்ட விசயங்களை என்னிடம் சொன்னான். அந்த நூலகம் எரிந்த போது அவனுக்கு ஒரு வயதாம். அவனுடைய அப்பா அந்த லைப்ரரி மெம்பரா இருந்தாராம். இப்படி நிறைய என்னிடம் ஊர் புதினங்களை அடிக்கடி சொல்வான். மற்றக் குழந்தைகளை விட இவனும் அருள்மொழியும் எனக்கு நெருக்கமானவர்களாகிவிட்டனர். என்னகாரணத்தாலோ தெரியவில்லை.
"ஏன் சேர் எங்களை எப்பவும் இவை மனுசராப் பார்க்கினமில்லை?" சட்டென்று மௌனத்தை அவன் தான் கலைத்தான். இவை என்று அவன் போலீஸ்காரரை தான் குறிப்பிடுகிறான் என்று எனக்கு புரிந்தது.
"சில கசப்பான சம்பவங்கள் இங்க நடந்ததும் தெரிந்தோ தெரியாமலோ உங்க ஊர்க்காரங்க பெயர் அந்த சம்பவங்களில் சம்மந்தப்பட்டதுனாலயும் தான் இந்த மாதிரி அவர்களும் உங்க மேல சந்தேகப்படும்படியாச்சு. இதுல வரப் போற சுதந்திர தினத்தன்னிக்கு தமிழ்நாட்டுல பரவலா பயங்கரவாத செயல்கள் நடக்கப் போற சாத்தியக் கூறுகள் இருக்குன்னு சந்தேகப்படறாங்க... அதான் இன்னிக்கு விசாரணை கொஞ்சம் கடுமையா இருக்கு" என்றேன் அவனை சமாதானப்படுத்தும் வகையில்.
"சுதந்திர தினம் எண்டால் என்ன சேர்?" மணல் வீடு கட்டுவதில் முனைப்பாக இருந்த அருள்மொழி திடீர் என்று கேட்ட கேள்வி அவள் உண்மையிலேயே அர்த்தம் தெரிந்து கொள்ளக் கேட்கிறாளா அல்லது வேண்டுமென்றே கேட்கிறாளா என்று என்னை யோசிக்க வைத்தது.
"ரொம்ப காலத்துக்கு முன்ன இந்த நாட்டை பிரிட்டிஷ்காரங்க கைப்பற்றி அவங்க கீழ எங்களை வைச்சு ஆண்டுகிட்டிருந்தாங்க. எங்க நாட்டில எங்களை இன்னொரு நாட்டுக்காரங்க ஆளலாமா? அதனால அவங்ககிட்டேருந்து நம்ம நாட்டை நாம திருப்பி பெறுவதற்காக நிறையப் பேர் போராடினாங்க... நிறையப் பேர் அந்த போராட்டத்தில் செத்துப் போனாங்க. சிறைக்குப் போனாங்க. கடைசில பிரிட்டிஷ்காரங்ககிட்டேருந்து எங்களுக்கு விடுதலை கிடைச்சுது. அந்த நாள் தான் சுதந்திரதினமுன்னு சொல்றோம்."
"ம்ம்... அப்ப எங்கட ஊரில நடக்கிறமாதிரி சண்டை நடந்ததோ? எங்களைப் போல கன பேர் அகதியா எங்கயும் போச்சினமோ மாஸ்டர்?"
அந்தச் சிறுமியின் கேள்வியின் கனம் மனதை பிராண்டியது.
"உங்கட நாட்டுக்கு சுதந்திரம் தேவையெண்டால் நீங்க சண்டை போட்டு சுதந்திரம் வாங்குறீயள்... ஆனா எங்களுக்கு சுதந்திரம் தேவையெண்டு நாங்கள் சண்டை போட்டால் ஏன் உங்கட நாடு சதி செய்யுது எங்களுக்கு நாடுகிடைக்க விடாம? "
எனக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. இளந்திரையனின் சிந்தனைகளும் , பார்வையும் மிகவும் விரிந்திருக்கிறது முன்னைக்கு இப்போது என்பது மட்டும் புரிந்தது.
"இந்தியா உங்களுக்கு சமாதான வழியில் உரிமை கிடைக்க வழி செய்யப்பார்த்தது. ஆனால் விரும்பத்தகாத வகையில் நிலைமை மாறிவிட்டது. உனக்கு இப்ப அது புரியாது. காலம் தான் அதை உனக்கு புரிய வைக்கும்."
"சமாதான வழியோ? சமாதானம் வாங்கித் தர வந்தவை ஏன் என்ர அம்மாவை சீரழிச்சவை? தடுக்கப் போன அப்பாவை சுட்டுக் கொன்றவை? என்ர அப்பா அஞ்சு வருசத்துக்கு பிறகு அண்டைக்கு தான் வெளிநாட்டில இருந்து வந்தவர் தெரியுமே? என்னையும் என்ர தங்கச்சியையும் துவக்குக்கு முன்னால வைச்சு முட்டி போடச் செய்திட்டு அம்மாவை கெடுத்தவை என்ர கண்ணுக்கு முன்னால. எங்கட நாட்டில எங்கட சுதந்திரத்துக்காக நடக்கிற சண்டைக்கில இவை வந்து ஏன் எங்களை இப்பிடி செய்தவை? "
நெற்றிப் பொட்டில் அறைந்தது போன்ற அந்தக் கேள்விகளில் மட்டுமில்லை, அவனுடைய குடும்பத்துக்கு நடந்த கொடுமையை இன்றைக்கு தான் அவனையறியாமல் அவன் என்னிடம் கொட்டியிருக்கிறான் என்ற உணர்வு அறைந்ததில் நான் பதில் சொல்லவியலாத சங்கடத்துடன் தலை குனிந்தேன். அவனுடைய கேள்வியின் அனல் நெடுநேரம் என்னை பொசுக்கிக் கொண்டிருந்தது.
"என்ன நடந்தாலும் எங்கட நாட்டை விட்டு நாங்கள் வந்திருக்கப்படாது. அங்க செத்திருந்தாலும் பரவாயில்லை."
ஒரு பதினைந்து வயதுப் பையனின் மனதில் இப்படியொரு எண்ணம் வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு என்று உலகமெலாம் பரப்பியிருக்கும் பெருமையை அவனுடய ஒற்றை வாக்கியம் அழிப்பது போல் எனக்கு பட்டது.
"ஏம்பா அப்படி சொல்றே..?"
"பின்ன என்ன சேர்..? அங்கேயும் இதானே... வீடு பூந்து இழுத்துக் கொண்டு போறாங்கள்... இங்கயும் இப்பிடித் தான் விசாரணையெண்டு பூந்து ஆக்களை கொண்டு போயினம். அங்க தமிழ் பண்டி. கொட்டியா எண்டும் கேக்கக் கூடாத கேள்வியும் கேட்டு சித்ரவதை செய்யிறாங்கள்... இங்கயும் புலி புலி எண்டு தானே எங்களை கேக்கினம்.. அப்ப ரெண்டு இடத்திலயும் என்ன வித்தியாசம் ஐயா.. அங்க இருந்தாலாவது சொந்தக்காரர், அக்கம் பக்கத்தார் எண்டு ஆட்கள் இருக்கினம். இங்க யார் இருக்கினம்? ஏன் தான் அம்மா எங்களையும் கொண்டு இங்க வந்தாவோ தெரியேலை.. "
"எங்களுக்கும் சுதந்திர தினம் வருமே அண்ணா?" திரும்பவும் அருள்மொழியின் கேள்வி என்னை அறைகிறது.
"நிச்சயம் கிடைக்கும். நாங்களும் ஒரு நாளைக்கு சுதந்திர தினம் கொண்டாடலாம்" இந்தப் பையனின் கண்களில் தான் எத்தனை நம்பிக்கை தெரிகிறது என்று எனக்கு மலைப்பாக இருந்தது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் இருக்கும் இவர்களுக்கு இந்த நம்பிக்கைக்காகவாவது கட்டாயம் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று தான் என் மனமும் அந்தக் கணம் நினைத்தது.
அவர்கள் போன பின்னும் என்னால் வீட்டுக்குப் போக மனமில்லாமல் அங்கேயே இருந்தேன். பொட பொடவென்று புல்லட் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன். வீதியில் மணிமாறன் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. நீண்ட நேரம் கடலையே பார்த்துக் கொண்டிருந்த நான் இருட்டத் தொடங்கினதும் மெதுவாக எழுந்து வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன். கடற்கரையை ஒட்டி குவிந்து கிடந்த கற்பாறைகள் கடலுக்கு மறைப்பு மதிலாக இருந்தது. முன்பு இந்த பாறைகளை தாவி தாவி ஏறி இறங்குவேன்.. குதூகலமாக.. இப்ப ஏற முடியுமா என்று சோதித்துப் பார்க்க ஆசையாக இருந்தாலும் எனது வயதும் களைப்பும் விடவில்லை. மணிமாறன் வந்த புல்லட் கற்பறாறையொன்றின் பக்கமாக சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தது.
"இவன் என்ன இங்க வந்தான்?" என்று யோசித்துக் கொண்டு நடந்தேன். வழியில் அந்த ஏட்டைய்யா வந்து கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மரியாதையாக "என்ன சார் இப்ப தான் வீட்டுக்குப் போய்ட்டிருக்கீங்க போல?" என்றான்.
"ஆமாப்பா..." என்றேன். ஏம்பா இன்னுமா உங்க டியூட்டி முடியலை? இங்கயே நிக்கறீங்க?"
"விசாரணையெல்லாம் முடிஞ்சுது சார். இன்ஸ்பெக்டர் ஐயா ஏரியாவை ரோந்து பார்க்க வந்திருக்கார். தண்ணி வேணும்னு சொல்லி அனுப்பினார். அதான் வாங்கிட்டு போறேன்," என்றார்.
"தண்ணியா?" என்று வினவிய நான் பின் புரிந்து கொண்டு "ஓ.. அந்த தண்ணியா? அந்தப் பழக்கமும் வந்திடுச்சா மாறனுக்கு?" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு ஏட்டைய்யாவை விட்டு விலத்தி நடக்கத் தொடங்கினேன்.
வீட்டுக்குப் போகும் வழி நெடுக அந்தக் கடற்கரையின் கற்பாறைகள் தான் இரைந்து கிடந்தன. வழியில் இளந்திரையன் வந்து கொண்டிருந்தான்.
"என்னடா பண்ணறே இங்க..? "
"அம்மாவைக் காணேலை சேர். தங்கச்சிக்கு பசிக்குதாம். அதான் இஞ்சாலைப் பக்கம் வந்தவவாவெண்டு பார்க்க வந்தன்."
"தங்கச்சி எங்கே?"
"அவள் அங்க முகாமில இருக்கிறாள். நான் தான் வந்தனான். அந்த போலீஸ்காரர் அம்மாவை பிறகும் வந்துஎன்னவோ கேட்டு மிரட்டிட்டுப் போனவராம். அதான் பயமா இருக்கு சேர். அம்மாவையும் பிடிச்சுக் கொண்டு போயிருப்பினமே சேர்?"
இளந்திரையன் முகத்தில் தெரிந்த பரிதவிப்பும் பயம் கலந்த சோகமும் பரிதாபமாக இருந்தது. அவனுடைய கேள்வி எனக்கு என்னையறியாமலேயே மணிமாறனையும், இளந்திரையனின் தாயைப் பார்த்த அவனுடைய பார்வையையும் திரும்பவும் மனக் கண் முன்னால் கொண்டு வந்தது நினைவு.
"அப்படியெதுவும் நடந்திருக்காதுடா... நீ முகாமுக்கு போய் தங்கச்சியைப் பார்... நான் போலிஸ் ஸ்டேசனில் போய் பார்த்துட்டு வரேன்.." என்று அவனை திருப்பி முகாம் பக்கமாக அனுப்பினேன்.
அரை மனதுடன் அவன் என்னை திரும்பித் திரும்பிப் பார்த்த படி சென்றான். நான் திரும்பி வந்த வழியாக மணிமாறனின் புல்லட் நின்ற இடத்தை நோக்கி நடந்தேன். ஏன் நான் அங்கு போகிறேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. பல்வேறான சிந்தனையோட்டங்களுடன் நடந்த எனக்கு ஒரு பெண்ணின் விசும்பல் ஒலி கேட்பது போலத் தோன்றவே நடப்பதை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு பாறையில் தலையை அடித்து அழுது கொண்டிருந்தாள் இளந்திரையனின் அம்மா. புரிந்து விட்டது, இரையாகிப் போன விருந்து எச்சில் பட்ட அருவெருப்பைக் கழுவ முயன்று கொண்டிருக்கிறது என்று. அவளுக்கருகில் போவதா வேண்டாமா என்று யோசித்தேன். அதற்குள் அவள் என்னைப் பார்த்துவிட்டாள். அவசர அவசரமாக சேலையை சரிசெய்து கொண்டு எழுந்திருக்க முயற்சித்தாள்... "வாங்கோ சேர்"
"இளந்திரையன் உன்னை தேடிக் கொண்டு திரிகிறான்.. அருள்மொழி பசியால அழுகிறாளாம்.. போ.. போய் பிள்ளைகளைப் பார்" என்றேன்.
அவள் மௌனமாக தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய உடல் குலுங்குவதிலிருந்து அழுகிறாள் என்று தெரிந்தது.
"நீ ஏன் இந்தப் பக்கம் வந்தாய்? வேட்டை நாய்கள் திரியிற நேரத்தில்?" என்னுடைய கேள்வியின் அர்த்தம் அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும். விசும்பல் அதிகமாகியது அவளிடம்.
"வாசல் தேடி வந்து என்ர பிள்ளையை இரையாக்குவன் நீ வராட்டில் எண்டு நாய் வெருட்டிட்டுப் போனால் நான்என்ன செய்ய மாஸ்டர்? எனக்கு என்ர பிள்ளை வேணூம் மாஸ்டர். அங்கேயும் என்ர பிள்ளையளிண்ட தலையில துவக்கை வைச்சு நடத்தினாங்கள். இங்க இவன் என்ர பிள்ளைய புலி எண்டு சொல்லி உள்ள தூக்கிப் போடுவன் எண்டு வாய் கூசாமல் கூப்பிடுறான் பொறுக்கி நாய். அப்பா செத்த துக்கத்தில இவன் வளர்ந்து வார நேரத்தில இயக்கம் போராட்டமெண்டு போயிடுவானோ எண்ட பயத்தில இங்க கொண்டு வந்தன். இப்ப என்ர பிள்ளை அப்பிடி போனாலும் பரவாயில்லையெண்ட மாதிரி போச்சு. இனி நினைக்கிற நேரமெல்லாம் இந்த நாய்என்னை கடிச்சு குதறப் போறானே. நான் என்ன செய்ய மாஸ்டர்?" அவளை தேற்ற வழி தெரியாமல் மனதுக்குள் குமைந்து போனேன்.
"யார் உன்னை இப்பிடி பண்ணினது? மணிமாறனா?"
"ஓம் அந்த புது இன்ஸ்பெக்டர் தான்"
"என்ன நடந்தாலும் எங்கட நாட்டை விட்டு நாங்கள் வந்திருக்கப்படாது. அங்க செத்திருந்தாலும் பரவாயில்லை." என்று இளந்திரையன் அப்போது சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தை என்று இப்போது எனக்கு புரிந்தது. எல்லாம் போன நிலையில் இந்தப் பெண்ணின் வாழ்கையில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? பிணத்துக்கும் இவளுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தோன்றியது. ஆக அவளுக்கு அங்கே மட்டுமல்ல இங்கேயும் எனது தேசத்தவனால் தான் கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வில் அவள் முன் நான் கூனிக் குறுகிப் போனேன்.
"இந்த ஆமிக்காரங்களுக்கும், போலீஸ்காரங்களுக்கும் அடுத்தவன் பெண்சாதிய அக்கா தங்கச்சியா பாக்க யாரும் சொல்லிக் குடுக்கிறதில்லையா? எனக்கு அவன் என்ர தம்பி மாதிரி தெரிஞ்சான் மாஸ்டர்.."
அவளை சமாதானப்படுத்த என்னிடம் எந்த வார்த்தைகளோ காரணங்களோ கிடைக்கவில்லை; சமாதானமாகிப் போகும் இழப்புமல்ல அவளுடையது. ஒருவன் உங்களைப் பலாத்காரம் செய்தானாகில் அவனுக்கெதிராக உங்கள் நகங்களையும் பற்களையும் ஆயுதங்களாக பாவியுங்கள் என்று மகாத்மாவே சொல்லியிருக்கிறார். அதைக் கூட செய்யவியலாத படி அவளை பணிய வைத்த அவனுடைய ஈனத்தனத்தை நினைக்க நெஞ்சுக்குள் எரிமலை வெடித்துச் சிதறுவது போல் கொதித்தது. பரிதபமாக இருந்தது அவளைப் பார்க்க... அவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் மௌனமாக இருந்த நான் சர சர வென்று மணலில் யாரோ ஓடுவது போலிருக்க திரும்பிப் பார்த்தேன். இருட்டில் இளந்திரையன் ஒடுவது தெரிந்தது. துணுக்குற்றுப் போனேன். எல்லாவற்றையும் கேட்டிருப்பானோ?" குழப்பமாக இருந்தது.
நெடு நேரம் அழுது தீர்த்துவிட்டு இளந்திரையனின் அம்மா எழும்பி முகாமை நோக்கி நடந்தாள் தள்ளாடியபடி. தமது எல்லா இழப்புகளையும் ஒரு சில காரணங்களுக்காக அப்படியே விழுங்கிக் கொண்டும், ஜீரணிக்கவும் பழகிவிட்ட பரிதாபமான அகதிகளில் ஒருத்தி தான் இவளும். இரண்டு பிள்ளைகளையும் தனியா பிற தேசத்தில் அனாதைகளாக விட்டு விட்டு தற்கொலை செய்யமாட்டாள் என்று மட்டும் உறுதியாகத் தோன்றியது.
வீட்டுக்கு போக மனமில்லாமல், அடக்க முடியாத ஆத்திரமும், இயலாமையுமாக திரும்பி மணிமாறனின் புல்லட் இருந்த இடத்தை நோக்கி நடந்தேன். இப்பவும் அவனிடம் ஏன் போகிறேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. என்னால் என்ன கேட்க முடியும் அவனிடம்? உடம்பை மட்டும் அனுபவிச்சால் போதும் என்ற மிருகத்தனம் உன்னிடம் எப்படி வந்தது என்று கேட்க முடியுமா? அவள் உன்னை விட 10 வயசாவது பெரியவளாயிருப்பாள் என்று சொல்லவா? அந்த மக்களின் பலவீனங்களையும், பயத்தையும் உனக்கு சாதகமாக்கிற உன்னை எந்தப் பட்டியலில் சேர்க்க என்று கேட்கவா? நீ எல்லாம் எதுக்குடா இந்த தேசத்தில பிறந்து இந்த மண்ணோட பெருமையை நாசமாக்கிறாய் என்று புலம்பவா? நீ நல்லா இருப்பியா? நாசமா தான் போவே ன்னு சாபம் விடவா? என்ன சொல்லி என்ன நடந்துவிடப் போகிறது?
அதே கற்பாறையில் புல்லட் இன்னமும் சாய்ந்து கிடந்தது. பாறைகள் குவிந்து மறைப்பாக அடுக்கப்பட்டிருந்தது கூட அவனுக்கு நல்ல வசதியாகத் தான் இருந்திருக்கிறது என்று தோன்றியது. இத்தனை நாள் அந்தப் பாறைகளில் ஏறத் தயங்கியவன் இப்போது ஆவேசத்துடன் மூச்சிரைக்க ஏறினேன். கீழே மணிமாறன் நல்ல போதையில் மல்லாந்து கிடப்பது நிலவு வெளிச்சத்தில் தெரிந்தது. கடலிலிருந்து ஓ வென்ற இரைச்சலுடன் பாய்ந்து வந்த அலைகள் ஒரு புள்ளியில் மோதி சிதறி பின் ஊர்ந்து வந்து அவனுடைய காலை நனைத்துக் கொண்டு சென்றது. என்னுடைய காலினடியில் விழட்டா விழட்டா என்று கேட்பது போல் பாறை ஒன்று தட தடத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் அந்தப் பாறையை வெறி கொண்டவனைப் போல் உந்தி தள்ளினேன். மேலே இருந்து உருண்ட பாறை சரியாக மணிமாறனின் தலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்க நான் திரும்பி வந்த வழியில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.. "செத்துப் போகட்டும் பொறுக்கி" ..
அடுத்த நாள் விடிந்த போது.....சுதந்திர தினம்!
பள்ளிக்கு கிளம்பினேன். கையில் இரவு எழுதி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை மறக்காமல் எடுத்துக் கொண்டேன். வெளியே வந்து வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு பாடசாலையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். தெருவில் அரக்க பரக்க கடற்கரைப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த சனங்களில் ஒருவன் " புது இன்ஸ்பெக்டரை யாரோ தலையில கல்லைப் போட்டு கொன்னுட்டாங்களாம். கடற்கரையில பாடி கிடக்காம்.." என்று தகவல் சொல்லியபடி ஓடிக் கொண்டிருந்தான். நிம்மதியாக பெருமூச்சு விட்டபடி நடக்கத் தொடங்கினேன்.
வழியில் அருள்மொழியும் தாயும் நின்றிருந்தனர். அவர்களோடு இளந்திரையனைக் காணவில்லை. தாயின் முகத்தில் திகில் படர்ந்திருந்தது.
"என்னம்மா..பையன் எங்க?" என்றேன்.
"தெரியேலை சேர்.. இரவு முழுக்க அவன் வரேலை.. பயமா இருக்கு மாஸ்டர். அந்த பொறுக்கியை யாரோ சாக்காட்டிப் போட்டிருக்கிறாங்களாம் எண்டு சனம் சொல்லுது, அதான் பயமா இருக்கு சேர்..."
"அம்மாவுக்கு விசர் சேர்... அண்ணை என்னட்ட சொல்லிட்டித் தான் போனவர்... எங்கட நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தரப் போறன் தேடாதே எண்டு சொல்லச் சொன்னவர். அம்மா நம்புறா இல்லை." இப்பவும் அருள் மொழி அர்த்தம் புரிந்து தான் சொல்கிறாளா அல்லது புரியாமலே சொல்கிறாளா என்று எனக்கு புரியவில்லை.
ஆனால் எனக்கு இன்னொன்று தெட்டத் தெளிவாகப் புரிந்தது. சுதந்திரத்தின் உண்மையான அர்த்தமும் தேவையையும் இளந்திரையன் உணர்ந்துவிட்டான். தன்னுடைய பங்கை செலுத்த போய்விட்டான் என்று புரிந்தது. இப்போது எனது கடமை என்ன என்று தான் எனக்கு குழப்பமாக இருந்தது..
கொஞ்ச நாட்களில் அருள்மொழியும், அவள் அம்மாவும் திரும்பி நாட்டுக்கே போய்விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இப்படியே காலங்கள் யாருக்கும் காத்திராமல் 1 2 தடவை உருண்டு போய்விட்டது.
பழைய நினைவுகளிலிருந்து மீண்ட போது மனதில் அந்த ஏக்கம் படர்ந்தது.. "இளந்திரையனை எப்படியாவது இன்னொரு தடவை பார்க்க கிடைத்தால்..?!